
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது புதுச்சேரி.
நேற்று (நவ.30) இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல். இதை ஒட்டி, நேற்றிரவு தொடங்கி இன்று பிற்பகல் வரை புதுச்சேரியில் கனமழை பெய்தது.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதுச்சேரியில் சுமார் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஃபெஞ்சல் புயலால் பெய்த இந்த கனமழையால், புதுச்சேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரியில் உள்ள வாய்க்கால்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் மழை நீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வாய்க்கால்களை தூர் வாராததால் மழை நீர் செல்லவில்லை என புதுச்சேரி பொதுமக்கள் ஊடகங்களில் குற்றம்சாட்டினர்.
விடாது பெய்த கனமழையால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள முத்தியால்பேட்டைக்கு அருகே இருக்கும் ஜம்மயத் நகர் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் சிக்கியிருந்த மக்கள் படகுகளின் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி நேரடியாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் கனமழை பாதிப்பு குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச அவரசகால கட்டுப்பாட்டு அறையில், பிற்பகல் 12.30 மணி அளவில் புதுச்சேரி தலைமைச் செயலாளர் ஷரத் சௌஹான், உள்துறை செயலாளர் கேசவன் ஆகியோர் தலைமையில் அரசு உயரதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.