
இலவசமாக ரேஷன் பொருட்கள் மற்றும் உதவித் தொகை கிடைப்பதால் பொதுமக்கள் வேலை பார்க்க விரும்புவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
நாட்டின் நகரப் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற மக்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டைன் ஜார்ஜ் அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி பி.ஆர். கவாய், `துரதிஷ்டவசமாக, இந்த இலவசங்கள் வழங்கும் கலாச்சாரத்தால் வேலைக்குச் செல்ல பொதுமக்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன. எந்த வேலையும் பார்க்காமல் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது’ என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்திய நகர்ப்புறங்களில் வசித்து வரும் வீடற்ற மக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் வகையில், நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணி நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
அவர்களுக்கான உங்களது அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். அதேநேரம் சமூகத்தின் முக்கியமான ஒரு அங்கமாக அவர்களை மாற்றி, தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வைப்பது மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தது நீதிபதிகள் அமர்வு.
மேலும், நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்தத் தேவைப்படும் கால அவகாசம் குறித்து அடுத்த விசாரணையின்போது தகவல் தெரிவிக்குமாறு வெங்கட்ரமணியிடம் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள்.