சாவா படத்தை நம்பி மத்திய பிரதேசத்தில் தங்கத்தை தேடும் மக்கள்!

விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில், மராட்டிய மன்னர் சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவான `சாவா’ படம் கடந்த பிப்ரவரி 14-ல் வெளியானது.
சாவா படத்தை நம்பி மத்திய பிரதேசத்தில் தங்கத்தை தேடும் மக்கள்!
1 min read

சாவா படத்தில் வரும் காட்சியை நம்பி, மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அசிர்கர் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தங்கத்தை தேடும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.

விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் மராட்டிய மன்னர் சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவான `சாவா’ படம் கடந்த பிப்ரவரி 14-ல் வெளியானது. மராட்டிய மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், வரலாற்று ரீதியாக இப்படத்தின் திரைக்கதையில் பல்வேறு பிழைகள் உள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை முன்வைத்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தற்போது தங்கத்தை தேடிவரும் நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்துடன் எல்லையைக் கொண்டுள்ள மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புர்ஹான்பூர் மாவட்டத்தில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசிர்கர் கோட்டை உள்ளது.

முகலாய ஆட்சிக் காலத்தில், குறிப்பாக மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது செழிப்பான நகரமாக இருந்தது புர்ஹான்பூர். தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அங்கே அச்சடிக்கப்பட்டன. இந்நிலையில், மராட்டியர்களிடம் இருந்து முகலாயர்கள் கைப்பற்றிய பொக்கிஷங்கள் அசிர்கர் கோட்டையில் வைக்கப்பட்டிருப்பதாக சாவா படத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது.

இந்த காட்சியை முன்வைத்து, கடந்த சில நாட்களாக அசிர்கர் கோட்டைக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பொக்கிஷங்களை கைப்பற்றும் நோக்கில் மண் தோண்டும் கருவிகள், உலோக கண்டுபிடிப்பான்கள், சல்லடைகள் ஆகியவற்றை உபயோகித்து கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோண்டி வருகின்றார்கள்.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் பலரும் முகலாயர்கள் காலத்து தங்க, வெள்ளி நாணயங்கள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளார்கள். எனவே சட்டவிரோதமாக பொதுமக்கள் இவ்வாறு ஈடுபட்டுவருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in