அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வராகப் பதவியேற்றார் பெமா காண்டு!
ANI

அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வராகப் பதவியேற்றார் பெமா காண்டு!

தேர்தல் நடைபெறும் முன்பே பாஜகவைச் சேர்ந்த 10 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்.
Published on

பாஜகவைச் சேர்ந்த பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அம்மாநிலத் தலைநகர் இடாநகரில் காண்டுவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் கெ.டி.பர்நாயக்.

நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலுடன், 70 இடங்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. ஜுன் 2-ல் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாஜகவுக்கு 46 இடங்கள் கிடைத்தன. தேர்தலுக்கு முன்பே பாஜகவைச் சேர்ந்த 10 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்.

44-வயதான பெமா காண்டு 2016-ல் முதல்முறையாக அருணாச்சலப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றார். பெமா காண்டுவின் தந்தை டோர்ஜி காண்டு 2007 முதல் 2011 வரை அருணாச்சலப் பிரதேச முதல்வராகப் பணியாற்றியுள்ளார். 2011 ஏப்ரல் 30-ல் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த அனைவரும் மரணமடைந்தனர்.

தந்தையின் மரணத்துக்குப் பிறகு அரசியலில் நுழைந்த பெமா காண்டு, அவரது தொகுதியான முக்டோவில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு தொடர்ந்து 4-வது முறையாக இந்த தேர்தலில் முக்டோ தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளார் பெமா காண்டு.

18-வது மக்களவைத் தேர்தலில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற நபர்களில் ஒருவரான கிரண் ரிஜிஜூ மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சராக உள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in