பவார் vs பவார்: சுப்ரியா சுலேவுக்கு எதிராக அஜித் பவார் மனைவி போட்டி!

பவார் குடும்பத்தினர் நேரடியாக மோதுவதால் யாரை ஆதரிப்பது என்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக இருப்பதாகத் தகவல்.
சுப்ரியா சுலே மற்றும் சுனேத்ரா (கோப்புப்படம்)
சுப்ரியா சுலே மற்றும் சுனேத்ரா (கோப்புப்படம்)ANI

மகாராஷ்டிரத்தில் உள்ள பாராமதி மக்களவைத் தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவும், அஜித் பவார் மனைவி சுனேத்ராவும் நேரடியாகப் போட்டியிடுகிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூலையில் அஜித்பவார், தனது ஆதரவாளர்களான 8 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனி அணியாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். இதனால், தேசியவாத காங்கிரஸ் பிளவுபட்டு, தொண்டர்களும் பிளவுபட்டு நிற்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் சரத் பவார் அணியும், அஜித் பவார் அணியும் எதிர்த்துக் களம் காண்கின்றன. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பாராமதி மக்களவைத் தொகுதி பவார் குடும்பத்தின் ஆதிக்கம் மிகுந்த தொகுதியாக உள்ளது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் பவார் அணி சார்பில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் அஜித் அணி சார்பில் துணை முதல்வர் அஜித் பவார் மனைவி சுனேத்ரா போட்டியிடுகிறார். பவார் குடும்பத்தினர் நேரடியாக மோதுவதால் யாரை ஆதரிப்பது என்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக இருப்பதாக, அங்குள்ள தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

பாராமதி மக்களவைத் தொகுதி பல ஆண்டுகளாகக் கடும் பஞ்சத்தை நோக்கி இருந்தது. இந்தபூர், டாண்ட், புரந்தர், போர் மற்றும் கண்டக்வால்ஸா ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுதி தற்போது விவசாயம், தொழில் மற்றும் வர்த்தகக் கேந்திரமாக உருவாகியுள்ளது.

பவார் குடும்பத்தின் ஆதிக்கம் உள்ள இந்தத் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 1960-களில் சரத் பவார் முதல் முதலாக போட்டியிட்டு வென்ற தொகுதி இதுதான். இந்தப் பகுதிகளில் சரத் பவாருக்கு நிறைய செல்வாக்கு உள்ளது. சுப்ரியா சுலே இதே தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எனினும், எதிரணியில் களம் இறங்கியுள்ள அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவுக்கு ஷிண்டே பிரிவு சிவசேனை மற்றும் பாஜக ஆதரவு கூடுதல் பலமாகும். எனவே, இந்தத் தொகுதி பரபரப்பான போட்டிக்குத் தயாராகியுள்ளது.

மகாராஷ்டிரத்தில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. உத்தவ் சிவசேனை, காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாராமதி தொகுதியில் மூன்றாவது கட்டமாக மே 7-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in