`ஆகஸ்ட் 24-ல் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மாநிலம் தழுவிய பந்த் அரசியலுக்காக இல்லை. சாதி, மத, பேதங்களைக் கடந்து மக்கள் அதில் பங்கேற்க வேண்டும்’ என்று பேட்டியளித்துள்ளார் சிவசேனா (உ.பி.டி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிர மாநிலம் கல்யாணுக்கு அருகே உள்ள பத்லாபூரில் நான்கு வயதான 2 சிறுமிகளை அவர்கள் படிக்கும் பள்ளியில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாலியல் துன்புறுத்தலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று குழந்தைகளை அவர் மிரட்டினார் எனவும் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை அடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த ஆகஸ்ட் 20-ல் பத்லாபூர் ரயில் நிலையத்தில் கூடி ரயில் தண்டவாளத்தை மறித்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இதில் பொது மக்கள், ரயில்வே பணியாளர்கள், காவல் துறையினர் என பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராடியவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதை அடுத்து இன்று (ஆகஸ்ட் 23) செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், "பள்ளியில் இதுபோன்ற குற்றங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. அதற்கு மக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர். சனிக்கிழமை ஒருநாள் ‘பந்த்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அதில் கலந்துகொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, "ஆகஸ்ட் 24-ல் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மாநிலம் தழுவிய பந்தில் அரசியல் இல்லை. சாதி, மத, பேதங்களைக் கடந்து மக்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். பத்லாபூரில் போராட்டம் நடத்திய நபர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்” என்றார்.