
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் வருகையை ஒட்டி ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், ஜேஇஇ முதன்மை தேர்வை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தவறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐஐடி, என்ஐடி போன்ற நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு சேர்க்கைகளுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு நேற்று (ஏப்.8) நடைபெற்றது.
தேர்வு நேரத்தின்போது, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் பெந்துர்தி பகுதியில் அமைந்திருந்த தேர்வு மையத்திற்கு வெளியே நின்று, கிட்டத்தட்ட 23 மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வுக்கு தாமதமாக வந்ததாகக் கூறி, தேர்வு மையத்திற்குள் நுழைய தங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
அந்த பகுதியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாயால் சாலைகள் மூடப்பட்டு, அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் உரிய நேரத்தில் மாணவர்களால் ஜேஇஇ முதன்மை தேர்வெழுதச் செல்ல முடியவில்லை என்று சமூக வலைதளங்களில் காணொளிகள் பதிவிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாகப்பட்டினம் நகர காவல்துறை அறிக்கை வெளியிட்டது. அதில்,
`தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 7 மணிக்கு வருகை தரவேண்டும் என்றும், 8 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவாயில்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நுழைவாயில்கள் மூடப்பட்டதற்குப் பிறகே, துணை முதல்வரின் கான்வாய் 8.41 மணிக்கு சம்மந்தப்பட்ட பகுதியைக் கடந்துச் சென்றது.
எனவே மாணவர்களின் தாமதமான வருகைக்கும், துணை முதல்வர் அந்தப் பகுதி வழியாகச் சென்றதற்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கமுடியாது என்பது தெளிவாகிறது. மேலும், 8.30 மணிக்கு முன்பு பிஆர்டிஎஸ் சாலை அடைக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கத் துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.