ஆந்திராவின் துணை முதல்வரானார் பவன் கல்யாண்!

துணை முதல்வர் பதவி குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை, மேலும் துணை முதல்வர் பதவிக்குத் தனியாக எந்த அதிகாரமும் கிடையாது.
ஆந்திராவின் துணை முதல்வரானார் பவன் கல்யாண்!
ANI
1 min read

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா விமான நிலையத்துக்கு அருகில் ஜூன் 12-ல் நடந்த பதவியேற்பு விழாவில், ஆந்திர மாநில அமைச்சராகப் பதவியேற்றார் நடிகர் பவன் கல்யாண்.

இந்நிலையில் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை பவன் கல்யாணுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு சட்ட-ஒழுங்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. துணை முதல்வர் பதவி குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெயரளவில் மட்டுமே துணை முதல்வர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மற்றபடி துணை முதல்வர் பதவிக்கு எனத் தனியாக எந்த அதிகாரமும் இல்லை.

18-வது மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்துச் சந்தித்தன. ஜுன் 4-ல் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 135 இடங்களும், ஜன சேனாவுக்கு 21 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் கிடைத்தன.

இதனால் 175 இடங்களைக் கொண்ட ஆந்திர மாநில சட்டமன்றத்தில் 164 இடங்கள் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது தெலுங்கு தேசம் கூட்டணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in