
லாலு பிரசாத் யாதவின் மனைவி என்பதைத் தவிர அரசியலுக்கு சம்மந்தமே இல்லாதவர் என்றும், கட்சி உங்கள் கணவருடையது என்றும் பீஹார் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவியை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி தற்போது பீஹார் மாநில சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். சுமார் 7.5 ஆண்டுகள் பீஹார் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அம்மாநில சட்ட மேலவையின் கூட்டம் தலைநகர் பட்னாவில் இன்று (மார்ச் 25) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சட்ட மேலவைக்கு வருகை தந்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.எல்.சி.க்கள் தங்கள் கட்சிக் கொடியின் நிறமான பச்சை நிறத்தில் பேட்ஜ்களை அணிந்து வந்தார்கள். அதில், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீடுகளை தேஜஸ்வி அரசாங்கம் உயர்த்தியது என்றும், பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்த பிறகு அது திருடப்பட்டது என்றும் தெரிவிக்கும் வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
இதனால் எரிச்சலடைந்த முதல்வர் நிதிஷ் குமார், ஒரு ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.சி.யை நோக்கிக் கைகாட்டியபடி, `இந்த காட்சியைப் பாருங்கள்.. இந்த கட்சியில் மட்டும்தான் இத்தகைய விஷயங்களைப் பார்க்க முடியும்’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றார் ராப்ரி தேவி.
உடனடியாக அவருக்குப் பதிலளித்த நிதிஷ் குமார், `அமருங்கள். நீங்கள் இதில் இருந்து விலகி இருங்கள். கட்சி உங்களுடையது அல்ல, உங்கள் கணவருடையது. லாலு பிரசாத் யாதவின் மனைவி என்பதைத் தவிர இந்த பெண்மணிக்கு வேறு எந்த சிறப்பும் இல்லை, அரசியலுக்கு சம்மந்தம் இல்லாதவர்” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
நிதிஷ் குமாரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.சி.க்கள், நிதிஷ் குமார் சமநிலையை இழந்துவிட்டார் என்று கூறி, சட்ட மேலவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.