
வரும் நவம்பர் 10-ல் ஓய்வு பெறவுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கடந்த மாதம் தன் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்ட நிகழ்வு குறித்து விளக்கமளித்துள்ளார்.
கடந்த மாதம் தில்லியில் தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதனை அடுத்து இது தொடர்பான புகைப்படங்களும், காணொளியும் வெளியாகின.
அரசியலமைப்பை பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அரசு நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களை சந்திக்கும்போது சந்தேகம் ஏற்படுகிறது எனக் கூறி இந்த நிகழ்வுக்கு எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தன. இந்நிலையில் நேற்று (அக்.27) மும்பையில் நடைபெற்ற லோக்சட்டா விரிவுரை கருத்தரங்கில் பங்கேற்றார் டி.ஒய். சந்திரசூட்.
அப்போது பிரதமர் மோடி தன் இல்லத்துக்கு வந்தது குறித்துப் பேசிய சந்திரசூட், நீதித்துறையைச் சேர்ந்தவர்களும், அரசு நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் சந்திக்கும்போது எந்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படாது எனவும், நீதித்துறையின் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்தே விவாதிக்கப்படும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் பேசிய சந்திரசூட், `நீதிபதிகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால், அதுபோன்ற தருணங்களில் நீதித்துறை தொடர்பான கருத்துக்கள் ஒருபோதும் பேசப்படாது. ஜனநாயக அமைப்பில் எங்களின் கடமைகள் எங்களுக்குத் தெரியும். அவர்களது கடமை என்னவென்று அரசு நிர்வாகத்தினருக்கும் தெரியும். அவர்களும் முதிர்ச்சியுடன் செயல்படுவார்கள்’ என்றார்.
மேலும் பேசிய சந்திரசூட், `ஜனநாயகத்தின் மூன்று கரங்களின் பணியும் தேசத்தின் முன்னேற்றம் என்கிற ஒரே குறிக்கோளை நோக்கியே செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த செயல்முறையை நாம் நம்பும் வரை, இத்தகைய உரையாடல்கள் தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றக்கொள்ள வேண்டும்’ என்றார்.