
கர்நாடகத்தின் தர்மஸ்தலாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் கூட்டு அடக்க வழக்கு மீதான விசாரணையில், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6-வது இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் பணியின்போது பகுதியளவு மனித எலும்புக்கூட்டின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில் ஆதாரங்களை வழங்கும் முதல் தளமாக இது உள்ளது. மேலும், காவல்துறை வட்டாரங்கள் அளித்த தகவல்களின்படி, எலும்புக்கூடு எச்சங்கள் பெரும்பாலும் ஒரு ஆணுடையதாக இருக்கலாம் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
1998 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் தர்மஸ்தலா பகுதியில் வைத்து, பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகளை வெளிப்படுத்திய பெண்கள் மற்றும் சிறார்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டு மீது சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவ இடத்தில் இருக்கும் தடயவியல் குழு, மனித எச்சங்களை பரிசோதனைகளுக்காகப் பாதுகாத்துள்ளது.
மேற்கொண்டு ஆதாரங்களைக் கண்டறிய ஒரு நாய் படை அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் காரணமாக எலும்புகள் சிதறியிருக்கக்கூடும் என்பதைக் கருத்தில்கொண்டு அப்பகுதியில் தோண்டும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த குறிப்பிட்ட இடத்தில் இரண்டு உடல்கள் புதைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர் தகவல் அளித்திருந்தார். இந்த வழக்கில் அடையாளம் காணப்பட்ட முதல் ஐந்து இடங்கள் நேற்று (ஜூலை 30) தோண்டப்பட்டன. ஆனால் அங்கே மனித எச்சங்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று செய்தி வெளியானது.