

நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 1 அன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்திய நாடாளுமன்றம் கடந்த ஜூலை 21 - ஆகஸ்ட் 21 வரையிலான மழைக்கால கூட்டத்தொடருக்குப் பிறகு கடந்த டிசம்பர் 1 அன்று குளிர்காலக் கூட்டத்தொடருக்காக மீண்டும் கூடியது. கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாள்களில் சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத்திருட்டு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பியதால் அமளியில் முடிந்தன. டிசம்பர் 3 முதல் ஆக்கபூர்வமான நிகழ்வுகள் நடைபெற்றன. வந்தே மாதரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தில்லி காற்று மாசு, திருப்பரங்குன்றம் விவகாரம் ஆகியவை குறித்தும் காரசார விவாதங்கள் நடைபெற்றன.
இதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதா இரு அவைகளின் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது. சந்தைப் பத்திரக் குறியீடு குறித்த மற்றொரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விரிவான ஆய்வுக்காக துறை தொடர்பான நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை 19 நாள்களில் 15 அமர்வுகள் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் சபாநாயகர் ஓம் பிர்லா தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அறிவித்த ஓம் பிர்லா, இந்தக் கூட்டத்தொடர் 111% ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதாகவும் பதிவு செய்தார்.
அதன் பின்னர் மக்களவையில் கூட்டத்தொடர் தொடங்கியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
Winter session ends after 15 sittings; both houses adjourned sine die