
சமஸ்கிருதம் உட்பட 6 மொழிகளில் நாடாளுமன்ற மொழிபெயர்ப்பு சேவை விரிவாக்கம் செய்யப்படுவதாக இன்று (பிப்.11) மக்களவையில் அறிவித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 12 மொழிகளில் எந்த மொழியில் உரையாற்றினாலும், அவை உடனுக்குடன் பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டு அவற்றைக் கேட்கும் வசதிகள் உள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக மக்களவையில் இன்று (பிப்.11) புதிய அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, `போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்பூரி, உருது, சமஸ்கிருதம் என மேலும் 6 மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
ஜனநாயக முறைப்படி அமைந்துள்ள இந்திய நாடாளுமன்ற அமைப்பு பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு சேவையை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளிலும் எதிர்காலத்தில் மொழிபெயர்ப்பு சேவையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன்,
`எந்த மாநிலத்தின் அலுவல் மொழியாகவும் சமஸ்கிருதம் இல்லை. யாரும் அந்த மொழியில் பேசுவதும் இல்லை. 73 ஆயிரம் மக்கள் சமஸ்கிருதத்தை பேசக்கூடும் என 2011 மக்கள்தொகை கணக்கீடு தகவல் தெரிவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கருத்தாக்கங்களுக்காக எதற்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும்?’ என்றார்.