
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூரில் வீரர்கள் பெற்ற வெற்றி கொண்டாடப்படும் என்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு இன்று (ஜூலை 21) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
விண்வெளி நிலையத்தில் இந்தியா கால் பதிப்பது முதல் 2026-க்குள் `நக்சலிசம் இல்லாத’ நாட்டை உருவாக்குவது வரையிலான பல்வேறு விஷயங்களை தன் பேச்சில் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், கூட்டத்தொடரின்போது ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடி பேசியபோதும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறி வருவது குறித்தும் விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டார்கள். இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை எதனால் அரசாங்கத்தால் கைது செய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் நிறுத்தத்திற்காக மத்தியஸ்தம் செய்ததாக 24 முறை டிரம்ப் கூறினார் என்று தன் உரையில் அவர் குறிப்பிட்டார்.
அஹமதாபாத்தில் 260 பேர் கொல்லப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து மற்றும் விமானப் பாதுகாப்பு பிரச்னை குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இது தொடர்பான விரிவான விளக்கத்தை அமைச்சர் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் வழங்கினார்.
அதேநேரம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்க விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே அரிய வகையில் ஒருமித்த கருத்தை எட்டப்பட்டிருந்தது.
அரசு இல்லத்தில் பணக்குவியல் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், யஷ்வந்த் வர்மா மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு தேவையான 100 எம்.பி.க்களின் கையொப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
கட்சிகள் ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபடவேண்டும் என்றும், கடுமையான விவாதங்களைத் தவிர்க்கவேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார். `நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நம் இதயங்களில் எப்படி கசப்பு இருக்க முடியும்?’ என்று எம்.பி.க்களிடம் தன்கர் கூறினார்.
முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அரசாங்கம் நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டது. குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரமும், மாநிலங்களவையில் 9 மணி நேரமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், வருமான வரி திருத்த மசோதா மக்களவையில் 12 மணி நேர விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.