
ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்றும், இதற்காக மக்களவைக்கு 16 மணிநேரமும், மாநிலங்களவைக்கு 9 மணிநேரமும் ஒதுக்கப்படும் என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று (ஜூலை 23) நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் (பிஏசி) விவாதத்திற்கான நேரம் குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்தவேண்டும் என்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் தொடங்கி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டு, அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
நடப்பாண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைக்கு எதிராக, காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி வத்ரா, கௌரவ் கோகாய், சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன், திமுக எம்.பி. கனிமொழி, திரிணாமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா மற்றும் இந்திய கூட்டணியின் பிற எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஜூலை 23) போராட்டம் நடத்தினார்கள்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருவதற்கு மத்தியில், நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று (ஜூலை 23) செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
`ஆபரேஷன் சிந்தூர் நடந்துகொண்டிருக்கிறது என்றும், ஒருபுறம் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூறுகிறீர்கள். மறுபுறம், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக 25-வது முறையாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஏதோ சந்தேகமாக இருக்கிறது. எந்த நாடும் நமது வெளியுறவு கொள்கையை ஆதரிக்கவில்லை’ என்றார்.