
ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு எந்த உலகத் தலைவரும் எங்களிடம் கூறவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்த மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக, தொடச்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் மக்களவையில் நேற்று (ஜூலை 28) தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் நடைபெற்ற விவாதத்தின் மீது பதிலுரை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது,
`கூட்டத்தொடரின் தொடக்கத்தின்போது, நான் ஒரு சுருக்கமான உரையை ஊடகங்களுக்கு வழங்கினேன். அப்போது இந்த கூட்டத்தொடர் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் அமர்வாக இருக்கும் என்று கூறினேன். 140 கோடி மக்களின் உணர்வாகவும், குரலாகவும் நான் இங்கே நின்றுகொண்டிருக்கிறேன்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது என்னுடன் நின்றதற்காக இந்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்தின் கூறுகளை அழிக்க சபதம் எடுத்தேன். ஏப்ரல் 22-க்குப் பிறகு உலகத்திற்குப் புரியவேண்டும் என்று ஆங்கிலத்திலும் பேசினேன்.
தீவிரவாதிகளை நாங்கள் மண்ணோடு மண்ணாக்குவோம் என்று நான் பொதுவெளியில் கூறியிருந்தேன். அவர்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று கூறினேன். தீவிரவாதத்திற்கு கடுமையான பதிலடி கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டோம்.
நமது ராணுவ வீரர்களின் ஆற்றல் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. அவர்களின் திறமை மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. பயங்கரவாதிகளை வீழ்த்தி அவர்களுக்குப் பாடம் கற்பிக்க பாதுகாப்புப் படைகளுக்கு அரசாங்கம் முழு சுதந்திரம் வழங்கியது.
தீவிரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவு அளித்தவர்களும் தூக்கம் தொலைந்து துன்பப்படுகிறார்கள். இந்தியாவால் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்க முடியும் என்பதை பாகிஸ்தான் ராணுவம் புரிந்துகொண்டது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தலை விடுக்கத் தொடங்கினார்கள்.
22 நிமிடங்களில் பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராணுவத்தின் முடிவின்படி அது மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் மண்ணின் மூலை முடுக்கெல்லாம் சென்று நாம் தாக்குதல் நடத்தியிருக்கிறோம். தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. அவர்கள் கனவில்கூட கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார்கள். பாகிஸ்தான் விடுத்த அணு ஆயுத மிரட்டல்களை நாம் தவிடுபொடியாக்கினோம்.
உலகில் எந்த தலைவரும் தாக்குதலை நிறுத்துமாறு எங்களிடம் கூறவில்லை. அதேபோல 9-ம் தேதி இரவு என்னுடன் பேச அமெரிக்க துணை அதிபர் பல முறை முயற்சி செய்தார். நான் ராணுவத்துடன் பேசிக்கொண்டிருந்ததால், அவருடன் பேச முடியவில்லை. அதன்பிறகு நான் அவரிடம் பேசினேன். பாகிஸ்தான் தாக்குதல் நடத்த இருப்பதாக அவர் கூறினார்.
ஒரு வேளை பாகிஸ்தானின் நோக்கம் அவ்வாறு இருந்தால், அதற்காக அந்நாடு மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டியது இருக்கும் என்று நான் கூறினேன்’ என்றார்.