
வரும் ஜூலை 21-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்வதுடன் நாடாளுமன்ற கேண்டீனில் ஆரோக்கியமான உணவுகளை ருசி பார்க்கவும் நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
ராகி, தினை, சோளம் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட இட்லி, உப்புமா, நார்ச்சத்து நிறைந்த காய்கறி சாலடுகள், புரதம் நிறைந்த சூப்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகள், மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து நாடாளுமன்ற கேண்டீன்களில் கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆதரிக்கும் நோக்கில், பசியைத் தூண்டும் வகையிலான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட மெனுவின்படி இனி நாடாளுமன்ற கேண்டீன்களில் புதிய உணவுகள் வழங்கப்படவுள்ளன.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முன்னெடுப்பால் வழங்கப்படவுள்ள இந்த புதிய உணவு வகைகள், கேண்டீன்களுக்கு வருபவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த முயல்வதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாரம்பரியமாக நாடாளுமன்ற கேண்டீனில் வழங்கப்படும் உணவுகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், `கிட்டத்தட்ட ஒவ்வொரு உணவும், அதில் உள்ள பொருட்களின் நன்மைகளைக் கருத்தில்கொண்டு கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள், சோடியம் மற்றும் கலோரிகள் குறைவாகவும், அதேநேரம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை நிறைந்தும் இருக்கின்றன. புதிய மெனுவில் ஒவ்வொரு உணவின் கலோரி எண்ணிக்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது’ என்றார்.