
கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டதை அடுத்து, நாள் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று (நவ.27) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ல் தொடங்கியது. அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை ஏற்கப்படாததால் தொடர் அமளியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நேற்று (நவ.26) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதனால் வழக்கமான அவை நடவடிக்கைகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், இன்று (நவ.27) காலை 11 மணிக்கு மக்களவையும், மாநிலங்களவையும் மீண்டும் கூடின. முதல் அலுவலாக மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதை ஏற்காததை அடுத்து, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள். இதனை அடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதேபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை எழுப்பி, ஒத்திவைப்பு தீர்மானங்களை அளித்தனர். அவற்றை மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கர் ஏற்காததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கபட்டது. மீண்டும் அவை கூடியதும், அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு தற்காலிக அவைத் தலைவர் திலிப் சைகியா தலைமையில் மக்களவை மீண்டும் கூடியது. தொடர்ச்சியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகளும் நாளை மீண்டும் கூடுகின்றன.