
போதிய பராமரிப்பை அளிக்காத பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்துகளை பெற்றோர் திரும்பப் பெறமுடியும் என்ற சட்டப்பிரிவை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
`முதிய குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம்’ கடந்த 2007-ல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. அடிப்படை வசதிகள் வழங்கப்படும் என்கிற உத்தரவாதத்தின் அடிப்படையில் முதிய குடிமக்கள் தங்களின் சொத்துகளைப் பிள்ளைகளுக்கு எழுதிவைக்க இந்த சட்டத்தின் பிரிவு 23 வழிவகை செய்கிறது.
அதேநேரம், சொத்துகள் மாற்றி எழுதிவைத்த பிறகு முன்பு வழங்கிய உத்தரவாதத்தைப் பிள்ளைகள் பூர்த்தி செய்யத் தவறினால், அந்த சொத்துப் பரிமாற்றத்தை ரத்து செய்யவும் இந்த 23-ம் பிரிவு வழிவகை செய்கிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஊர்மிளா தீக்ஷித் என்பவர், தன்னைப் பார்த்துக்கொள்வதாக வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில், 1968-ல் தாம் வாங்கிய சொத்தை தன் மகன் சுனில் சரண் தீக்ஷித்திற்குத் தானப் பத்திரம் எழுதி வைத்துள்ளார்.
ஆனால் தானப் பத்திரத்தைப் பெற்ற பிறகு ஊர்மிளாவை சுனில் தீக்ஷித் சரிவர பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முன்பு எழுதிய தானப் பத்திரத்தை ரத்து செய்யுமாறு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ஊர்மிளா தீக்ஷித்.
வழக்கை விசாரித்தத் தனி நீதிபதி அமர்வு ஊர்மிளாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து சுனில் தீக்ஷித் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகளைக் கொண்ட மத்திய பிரதேச உயர் நீதிமன்ற அமர்வு, அவருக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஊர்மிளா தீக்ஷித். ஊர்மிளாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி. ரவிக்குமார், சஞ்சய் கரோல் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு,
`முதிய குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்ப்பாயங்களுக்கு, இந்தச் சட்டப்பிரிவு 23-ன் கீழ் போதிய பராமரிப்பை அளிக்காத பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்துகளை பெற்றோருக்கு மாற்றி உத்தரவிட அதிகாரம் உள்ளது’ என்று தீர்ப்பளித்தது.