தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளை மேம்படுத்த குழு அமைப்பு

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (கோப்புப்படம்)
மத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (கோப்புப்படம்)

தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் தேர்வுகளை மேம்படுத்த மத்திய கல்வித் துறை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்துள்ளது.

தேசிய தேர்வு முகமை நடத்திய மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் எழுந்ததைத் தொடர்ந்து, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நாடு முழுக்க தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் வலுத்துள்ளது. இரு நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதன்படி, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன், நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் உயர்நிலைக் குழு அமைத்துள்ளது. தேர்வு முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது, தரவுகள் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படச் செய்வது, தேசிய தேர்வு முகமையின் அமைப்பு முறை மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.

குழு விவரம்:

  • கே. ராதாகிருஷ்ணன், இஸ்ரோ முன்னாள் தலைவர் (குழுத் தலைவர்)

  • ரண்தீப் குலேரியா, தில்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர்

  • பேராசிரியர் பி.ஜே. ராவ், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் துணை வேந்தர்

  • பேராசிரியர் ராமமூர்த்தி, சென்னை ஐஐடி

  • பங்கஜ் பன்சால், கர்மயோகி பாரத் இணை நிறுவனர்

  • பேராசிரியர் ஆதித்யா மிட்டல், ஐஐடி தில்லி

  • கோவிந்த் ஜெயிஸ்வால், மத்தியக் கல்வித் துறை இணைச் செயலர் (குழு உறுப்பினர் செயலர்)

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in