வி.கே. பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல: நவீன் பட்நாயக்

"நேர்மைக்காக வி.கே. பாண்டியன் மதிக்கப்பட வேண்டும்"
வி.கே. பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல: நவீன் பட்நாயக்

வி.கே. பாண்டியன் தன்னுடைய அரசியல் வாரிசு அல்ல என்று ஒடிஷா முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஒடிஷாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தோல்வியைச் சந்தித்துள்ளது. 147 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஒடிஷாவில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இந்தத் தேர்தல் பிரசாரங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே. பாண்டியன் கட்டுப்பாட்டில் ஒடிஷா செல்ல வேண்டுமா என்ற கருத்தில்தான் பாஜக தொடர்ந்து பிரசாரங்களை மேற்கொண்டது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வி.கே. பாண்டியன் தன்னுடைய அரசியல் வாரிசு கிடையாது என்று நவீன் பட்நாயக் விளக்கமளித்துள்ளார்.

புவனேஸ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்த நவீன் பட்நாயக் தேர்தல் முடிவுகள் மற்றும் வி.கே. பாண்டியன் குறித்து கூறியதாவது:

"சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் நம் கோயில்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களில் வி.கே. பாண்டியன் பணியாற்றவும் செய்துள்ளார், உதவியும் செய்துள்ளார். அவர் கட்சி இணைந்தார். ஆனால், அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

அவர் என்னுடைய அரசியல் வாரிசு கிடையாது என்பதை நான் எப்போதும் கூறி வருகிறேன். என்னிடம் இதுகுறித்து கேட்கும்போதெல்லாம், அவர் என்னுடைய அரசியல் வாரிசு கிடையாது என்பதைக் கூறியிருக்கிறேன். அவர் அரசியல் வாரிசு அல்ல என்பதை மீண்டும் கூறுகிறேன். என் அரசியல் வாரிசு யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

வி.கே. பாண்டியன் மீதான விமர்சனங்கள் என்னுடைய கவனத்துக்கும் வந்தது. இது துரதிருஷ்டவசமானது. ஓர் அதிகாரியாக இவர் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இரு புயல் பாதிப்புகள் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பின்போது சிறப்பாகவே பாண்டியன் செயல்பட்டார். பிறகு, ஐஏஎஸ் பொறுப்பை ராஜினாமா செய்து என்னுடையக் கட்சியில் இணைந்தார். அவருடைய நேர்மைக்காக அவர் மதிக்கப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் கையில்தான் உள்ளது. ஜனநாயகத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அல்லது தோல்வியடைவீர்கள். நீண்டகாலமாக ஆட்சியிலிருந்த பிறகு தோல்வியடைந்திருக்கிறோம் எனும் பட்சத்தில், மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒடிஷாவின் 4.5 கோடி மக்களும் என் குடும்பத்தினர்தான். என்னால் முடிந்த வழிகளில் அவர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்றார் நவீன் பட்நாயக்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in