பணமோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் ஒரு மாத கால பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
பிரபல மதபோதகரான ஜாகிர் நாயக், பிற மதங்களைவிட இஸ்லாம் உயர்வானது என்று தன் பீஸ் (Peace) தொலைக்காட்சியில் அடிக்கடி பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர். 2016-ல் மலேசியாவில் மத போதக நிகழ்ச்சிக்கு ஜாகிர் நாயக் சென்றிருந்தபோது, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.
இதை அடுத்து இந்தியாவுக்குத் திரும்பாமல் மலேசியாவிலேயே தங்கி விட்டார் ஜாகிர் நாயக். மேலும், தன் உரைகளின் மூலம் இளைஞர்களை தீவிரவாதப் பாதைக்குத் திருப்புவதாகவும், இரு சமூகங்களிடையே விரோதத்தை ஏற்படும் வகையில் வெறுப்பு பேச்சைப் பேசியதாகவும் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிந்து கடந்த 2021-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.
இந்நிலையில் இத்தனை வருட காலமாக மலேசியாவில் தங்கியிருந்த ஜாகிர் நாயக், பாகிஸ்தான் அரசு அழைப்பின் பேரில் மத போதகப் பணியில் ஈடுபடும் வகையில் சுமார் ஒரு மாத பயணமாக இன்று (செப்.30) பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
ஜாகிர் நாயக்கால் நடத்தப்படும் பீஸ் தொலைக்காட்சி இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. அவரது சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக கனடா, இங்கிலாந்து நாடுகளில் நுழைய ஜாகிர் நாயக்குக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.