காங்கிரஸ் கட்சியின் தவறுகளின் விளைவாகவே பாகிஸ்தான் உருவானது: அமித்ஷா | Amit Shah | Congress

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை அவர்கள் கைப்பற்றவில்லை, அதற்கும் மேலாக வென்ற 15 ஆயிரம் சதுர கி.மீ. நிலத்தையும் திருப்பிக் கொடுத்தார்கள்.
மக்களவையில் பேசிய அமித்ஷா
மக்களவையில் பேசிய அமித்ஷாANI
2 min read

காங்கிரஸ் கட்சியால் ஏற்பட்ட தவறுகளின் விளைவாகவே பாகிஸ்தான் உருவானதாகவும், பிரிவினைக்கு ஒப்புக்கொண்டு காங்கிரஸ் தேசத்தைப் பிரித்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கடந்த ஜூலை 21-ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நேற்று (ஜூலை 28) ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது. இதில் கலந்துகொண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

இந்நிலையில், 2-வது நாளாக ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று (ஜூலை 29) நடைபெற்ற விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,

`நாம் ஏன் போருக்குச் செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஆனால் போர் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது - இதைப் புரிந்துகொள்ள, வரலாற்று ரீதியிலான சில நிகழ்வுகளை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

1948-ம் ஆண்டில், காஷ்மீரில் நமது படைகள் ஆதிக்கம் செலுத்தின. நாம் முன்னேறிச் செல்லவேண்டும் என்று சர்தார் படேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார், ஆனால் ஒருதலைப்பட்சமாக ஜவஹர்லால் நேரு போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

இதை நான் முழு பொறுப்புடன் கூறுகிறேன் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு நேருவே காரணம். அது மட்டுமல்லாமல், சிந்து நீர் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 80% நதி நீரை நேரு பாகிஸ்தானுக்கு வழங்கினார்.

1971-ம் ஆண்டு, ஒட்டுமொத்த தேசமும் இந்திராஜியை ஆதரித்தது. அவர் பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தார், அது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, முழு இந்தியாவும் அதில் பெருமை கொள்கிறது, நாங்களும் அதைப் பெருமையாகக் கருதுகிறோம்.

அந்த நேரத்தில், 93 ஆயிரம் போர்க் கைதிகளும், 15 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பும் நமது கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் சிம்லா ஒப்பந்தம் ஏற்பட்டபோது, அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரைக் கோர மறந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை கேட்டிருந்தால், மூங்கிலோ புல்லாங்குழலோ இசைத்திருக்காது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை அவர்கள் கைப்பற்றவில்லை, அதற்கும் மேலாக வென்ற 15 ஆயிரம் சதுர கி.மீ. நிலத்தையும் திருப்பிக் கொடுத்தார்கள்.

நமது காலத்தில் நடைபெற்ற அனைத்து பயங்கரவாத சம்பவங்களும் பாகிஸ்தானால் ஈர்க்கப்பட்டு, காஷ்மீரை மையமாகக் கொண்டவை; 2014 முதல் 2025 வரை நாட்டின் பிற பகுதிகளில் ஒரு பயங்கரவாத சம்பவம் கூட நடக்கவில்லை. இதுதான் நரேந்திர மோடி அரசு.

காஷ்மீரில்கூட, இன்றைய சூழலில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை அனுப்பவேண்டிய நிலைக்கு வந்துவிட்டனர்; பயங்கரவாதிகள் காஷ்மீரில் உருவாக்கப்படுவதில்லை.

காங்கிரஸ் கட்சியின் தவறுகளின் விளைவாகவே பாகிஸ்தான் உருவானது. பிரிவினை என்ற கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டிருந்தால், பாகிஸ்தான் ஒருபோதும் உருவாகியிருக்காது. பிரிவினைக்கு ஒப்புக்கொண்டதன் மூலம், காங்கிரஸ் நாட்டைப் பிரித்தது.

1986-ல் ராஜீவ் காந்தி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, தாவூத் இப்ராஹிம் கஸ்கர் தப்பி ஓடினார். 1993-ல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, சையத் சலாவுதீன், டைகர் மேமன் தப்பி ஓடினார்கள். அனிஸ் இப்ராஹிம் கஸ்கர் 1993-ல் தப்பி ஓடினார், (அப்போது) காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது.

2007-ல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ரியாஸ் பட்கல் தப்பி ஓடினார். 2010-ல் இக்பால் பட்கல் தப்பி ஓடினார், அப்போதும் அவர்களின் அரசாங்கமே ஆட்சியில் இருந்தது. அவர்கள் என்னிடம் கோரிய பதிலை ஏற்கனவே நமது பாதுகாப்புப் படைகளால் வழங்கப்பட்டுவிட்டன. இவர்கள் எதனால் தப்பி ஓடினார்கள் என்பது குறித்து இப்போது ராகுல் காந்தி பதிலளிக்கட்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in