
வான்வழியில் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தான் விமானப் படைத் தளங்களைக் குறிவைத்ததாக கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ச்சியாக இந்தியா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. மே 9 இரவிலும் இரு நாடுகளுக்கிடையே சண்டை ஏற்பட்டது. பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன.
இதன் சமீபத்திய தகவல்களை அறிவிப்பதற்காக கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் இன்று காலை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
கர்னல் சோஃபியா குரேஷி ஹிந்தியிலும், விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆங்கிலத்திலும் விளக்கமளித்தார்கள்.
"மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்திய ராணுவத் தளங்களைக் குறிவைக்க ட்ரோன்கள், தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஆயுதங்கள், வானிலிருந்தபடி இலக்குகளைக் குறிவைத்து தாக்கும் ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. பாகிஸ்தானின் பல்வேறு தாக்குதல்களை இந்தியா தகர்த்துவிட்டது.
ஆனால், 26 இடங்களில் வான்வழியாக ஊடுருவ பாகிஸ்தான் முயற்சித்தது. உதம்பூர், புஜ், பதன்கோட், பதிண்டா விமானப் படைத் தளங்களில் நமது சாதனங்களுக்கு சேதத்தை உண்டாக்கியுள்ளன. அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பஞ்சாப் விமானப் படைத் தளத்தைக் குறிவைத்து அதிகாலை 1.40 மணிக்கு அதிவேகத்தில் தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. அவர்கள் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பள்ளிகளையும் குறிவைத்துள்ளார்கள்.
துரிதமான மற்றும் சரியாக அளவில் இந்தியா தக்க பதிலடியைக் கொடுத்தது. கண்டறியப்பட்ட ராணுவ இலக்குகளை மட்டும் குறிவைத்து இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்திய விமானப் படைத் தளங்களை பாகிஸ்தான் குறிவைத்ததைத் தொடர்ந்து, இந்தியப் படைகள் மிகத் துரிதமாக திட்டமிட்டு பதில் தாக்குதலை மேற்கொண்டது. தொழில்நுட்பக் கட்டமைப்புகள், கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவை குறிவைக்கப்பட்டன. ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹிம் யார் கான், சுக்குர் மற்றும் சுனியன் ஆகிய இடங்களிலுள்ள பாகிஸ்தான் ராணுவப் படைத் தளங்கள் வான்வழி ஏவுதல், துல்லியமான ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் குறிவைக்கப்பட்டன. துல்லியமான ஆயுதங்கள் மூலம் பஸ்ரூரிலுள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டிலுள்ள விமானப் படைத் தளம் குறிவைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் மூலம் இந்தியா குறைந்த அளவிலான சேதம் மற்றும் இழப்புகளை உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் தொடர்ச்சியாக தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றன. இந்தியாவின் எஸ்-400 அமைப்பு அழிக்கப்பட்டதாகக் கூறியது. சூரத், சிர்சா ஆகிய இடங்களில் விமான தளங்கள் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்தப் பொய்ச் செய்திகள் அனைத்தையும் இந்தியா சந்தேகத்துக்கு இடமின்றி மறுக்கிறது.
ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் உதம்பூரில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளி வளாகங்களை பாகிஸ்தான் குறிவைத்துள்ளது கண்டனத்துக்குரியது. அப்பாவி மக்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பதன் மூலம், பாகிஸ்தானின் பொறுப்பற்றத்தன்மை மீண்டும் வெளிப்பட்டுள்ளது" என்று சோஃபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் கூறினார்கள்.
வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளிக்கையில், "இன்று அதிகாலை ரஜௌரியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. மாவட்ட வளர்ச்சிக்கான கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தாப்பா உயிரிழந்தார்.
இந்தியாவில் பல்வேறு ராணுவக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக பாகிஸ்தான் அரசு அமைப்புகள் கூறும் அனைத்தும் பொய். சிர்சா, சூரத்கர் விமானப் படைத் தளங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறுவது பொய். ஆதம்பூரில் எஸ்-400 அமைப்பு அழிக்கப்பட்டதாகக் கூறுவது பொய்.
இந்தியா ஆப்கானிஸ்தானைத் தாக்கியுள்ளது என்பது முற்றிலும் அபத்தமான குற்றச்சாட்டு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல முறை ஆப்கானிஸ்தானில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உள்கட்டமைப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய நாடு எது என்பதை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை" என்றார் விக்ரம் மிஸ்ரி.