சண்டையை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது: ஐ.நா. சபையில் இந்தியா பதிலடி! | India Pakistan |

"இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில் மூன்றாவது தரப்புக்கு இடமில்லை."
சண்டையை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது: ஐ.நா. சபையில் இந்தியா பதிலடி! | India Pakistan |
ANI
1 min read

ஆபரேஷன் சிந்தூரின்போது சண்டையை நிறுத்தச் சொல்லி பாகிஸ்தான் கெஞ்சியதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 80-வது அமர்வுக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்கில் நடைபெற்று வருகிறது. இந்தியா உரையாற்றுவதற்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியப் படைகளைத் திருப்பி அனுப்பியதாகவும் ஷெபாஸ் ஷெரிஃப் பெருமையுடன் பேசினார். நகரங்களையும் பொதுமக்களையும் இந்தியா குறிவைத்ததாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவின் ஹிந்துத்துவ பிரிவினைவாதம் ஒட்டுமொத்த உலகுக்கும் அச்சுறுத்தல் என்றார் பாகிஸ்தான் பிரதமர் ஷெரிஃப்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பெடல் கலாட் உரையாற்றினார். தனது உரையில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்குத் தக்க பதிலடியைக் கொடுத்தார் கலாட்.

பெடல் கலாட் பேசியதாவது:

"இந்தியப் படைகளால் பல்வேறு விமானப் படைத் தளங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் புகைப்படங்கள் பொதுத்தளங்களில் உள்ளன. பிரதமரின் பார்வையில் சேதமடைந்த ஓடுதளங்கள் வெற்றியாகத் தெரிந்தால், அவர் அதைத் தாராளமாகக் கொண்டாடட்டும். ஆபரேஷன் சிந்தூர் பற்றி எல்லாமே தெளிவாக இருக்கிறது. மே 9 வரை இந்தியா மீது தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் அச்சுறுத்தியது. ஆனால், மே 10 அன்று அந்நாட்டு ராணுவம் சண்டையை நிறுத்துமாறு எங்களிடம் நேரடியாகக் கெஞ்சியது.

வழக்கம்போல, இந்திய மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தான் காரணம். எங்களுடைய மக்களைப் பாதுகாப்பதற்கான உரிமையை நிலைநாட்டினோம். பயங்கரவாதச் செயல்களின் பின்னணியில் இருந்தவர்களை நீதியின் முன் நிறுத்தியுள்ளோம்.

பஹவல்பூர் மற்றும் முரிட்கே பயங்கரவாதக் கட்டடங்களில் ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பல்வேறு புகைப்படங்களைப் பார்த்தோம். பாகிஸ்தானின் மூத்த ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் இதுபோன்ற மோசமான பயங்கரவாதிகளைப் பகிரங்கமாகப் புகழ்ந்து மரியாதை செலுத்தும்போது, ​​இந்த ஆட்சியின் போக்கு குறித்து ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா?

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையில் மையமாக இருக்கும் பயங்கரவாதத்தை அந்நாட்டு பிரதமர் மீண்டும் ஒரு முறை புகழ்கிறார். ஆனால், எப்படிப்பட்ட நாடகம் அரங்கேறினாலும், உண்மைகளை மறைக்க முடியாது. பாகிஸ்தான் பிரதமர் அமைதி குறித்துப் பேசினார். இந்தக் கோரிக்கை நேர்மையானது எனும் பட்சத்தில், அதற்கான தீர்வு தெரிந்தது தான். அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியா தேடி வரும் பயங்கரவாதிகளை அவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்னை இரு நாடுகளால் பேசித் தீர்த்துக் கொள்ளப்படும். இதில் மூன்றாவது தரப்புக்கு இடமில்லை. நீண்ட காலமாக இது தான் எங்களுடைய நிலைப்பாடு" என்றார் பெடல் கலாட்.

India Pakistan | Pakistan | India | Pakistan PM Shehbaz Sharif | Petal Gahlot | UN General Assembly |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in