பாகிஸ்தானுடன் தொடர்புடைய காலிஸ்தான் தீவிரவாதிகள்: உ.பி.யில் என்கவுண்டர்!

குண்டெறி தாக்குதலைத் தொடர்ந்து, இந்த மூவரும் உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் பஞ்சாப் காவல்துறையினருக்குக் கிடைத்தது.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய காலிஸ்தான் தீவிரவாதிகள்: உ.பி.யில் என்கவுண்டர்!
1 min read

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் இன்று (டிச.23) காலை உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாபைச் சேர்ந்த குர்விந்தர் சிங், விரேந்தர் சிங் (எ) ரவி மற்றும் ஜஸ்பிரீத் சிங் (எ) பிரதாப் சிங் ஆகிய மூவரும் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் ஸிந்தாபாத் ஃபோர்ஸ் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

கடந்த டிச. 21-ல், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலானௌர் பகுதியில் இருந்த காவல்துறைக்கு சொந்தமான ஒரு சோதனைச் சாவடியின் மீது இவர்கள் மூவரும் குண்டெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் எந்தவொரு உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை.

குண்டெறி தாக்குதலைத் தொடர்ந்து, இந்த மூவரும் உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் பஞ்சாப் காவல்துறையினருக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பிலிபிட் மாவட்டத்தின் புரன்பூர் காவல் நிலைய காவலர்களிடம் தீவிரவாதிகள் தொடர்பாக தகவல் பகிரப்பட்டது.

இதனை அடுத்து, இன்று (டிச.23) காலை இரு மாநில காவல்துறையினரும் இணைந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்தனர். காவல்துறையினர் சுற்றிவளைத்த பிறகு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பதிலுக்குக் காவல்துறையினர் நடத்திய எதிர்தாக்குதலில் தீவிரவாதிகள் மூவரும் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து இரு ஏ.கே-47 துப்பாக்கிகள், இரு கிளாக் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த என்கவுண்டர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ், காலிஸ்தான் ஸிந்தாபாத் ஃபோர்ஸ் அமைப்பின் தலைவர் ரஞ்சித் சிங் நீட்டா பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in