
துருக்கியில் தயாரான டிரோன்களை வைத்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக இன்று (மே 9) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல், அதற்கு இந்தியா அளித்த பதிலடி தொடர்பாக இன்று (மே 9) மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
முதலில், கர்னல் சோஃபியா குரேஷி ஹிந்தியிலும், விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆங்கிலத்திலும் நேற்றிரவு (மே 8) பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக கூறியதாவது,
`மே 8-9 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில், மேற்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைகளின் உள்கட்டமைப்புக் குறிவைத்து, இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் ராணுவம் பலமுறை அத்துமீறலில் ஈடுபட்டது. மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே கனரக ஆயுதங்களை வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது.
(லடாக்கின்) லேவில் தொடங்கி (குஜராத்தின்) சர் கிரீக் வரையிலான 36 இடங்களில் தோராயமாக 300 முதல் 400 வரையிலான டிரோன்களை வைத்து தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த டிரோன்கள் பலவற்றையும் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பை சோதனை செய்து, உளவுத் தகவல் பெறும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அவை துருக்கியில் தயாரான டிரோன்கள் என்பது தெரியவந்துள்ளது.
(பஞ்சாபின்) பதிண்டா ராணுவ முகாமை வான்வழி மூலம் தாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் 4 இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது.
கனரக துப்பாக்கிகள் மற்றும் டிரோன்களை உபயோகித்து தந்தார், உரி, பூஞ்ச், மெந்தார், ரஜோரி, அக்னூர், உதம்பூர் ஆகிய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர், மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
இதற்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், பாகிஸ்தான் தரப்பிற்கு கடுமையான சேதாரம் ஏற்பட்டது. மேலும், பாகிஸ்தானின் பொறுப்பற்ற செயல் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மே 7 அன்று தன்னிச்சையாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கிய பிறகும், பயணியர் விமானத்திற்காக அதன் வான் எல்லை இன்னும் மூடவில்லை. பயணியர் பாதுகாப்பு விமானங்களை தெரிந்தே கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.
பயணியர் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. பயணியர் விமானங்கள் பரப்பதை எங்கள் வான் எல்லையில் தடைசெய்துள்ளோம். ஆனால் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் வரையிலான விமான வழித்தடத்தில் சர்வதேச பயணியர் விமானம் பறந்துள்ளது.’ என்றனர்.