
எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ஊடுருவலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, நேற்று (ஏப்ரல் 1) கிருஷ்ணா காட் செக்டாரில் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது.
குறிப்பாக எல்லைப் பகுதியில் அமைந்திருந்த இந்திய ராணுவத்தின் முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்றது. உடனடியாக சுதாரித்த இந்திய ராணுவத்தினர், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்குப் பதிலடி கொடுத்ததாக, இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கர்னல் சுனீல் பர்த்வால் தகவலளித்தார்.
மேலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் எல்லைப்பகுதி தீவிரமாக கண்காணிப்படுவதாகவும் அவர் தகவல் கூறினார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோட்டிற்கு அருகே அமைதியைப் பேணுவதற்காக கடந்த 2021-ல் எட்டப்பட்ட புரிந்துணர்வுக்கான முக்கியத்துவத்தை இந்திய ராணுவம் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீருக்குச் செல்லவுள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட இந்த அத்துமீறல் நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், பாதுகாப்புப் படையினரும் யூனியன் பிரதேச காவல்துறையினரும் இணைந்து, கடந்த 11 நாட்களாக கத்துவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.