பஹல்காம் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே பிரதமருக்கு உளவுத் தகவல் கிடைத்துள்ளது: கார்கே
ANI

பஹல்காம் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே பிரதமருக்கு உளவுத் தகவல் கிடைத்துள்ளது: கார்கே

அது குறித்து உங்களுக்குத் தெரிந்த பிறகும் ஏன் முறையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.
Published on

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட உளவுத்துறை அறிக்கை பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடைக்கப்பெற்றதாகவும், அதைத் தொடர்ந்தே அவரது காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், மல்லிகார்ஜுன் கார்கே இன்று (மே 6) கலந்துகொண்டார்.

பஹல்காமில் விடுமுறையைக் கொண்டாடிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் உளவுத்துறை தோல்வியால் ஏற்பட்டதாக, அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக இந்த நிகழ்வில் கார்கே குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது,

`இது உளவுத்துறையின் தோல்வி என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அதை அவர்கள்தான் தீர்க்கவேண்டும். இது அவர்களுக்குத் தெரிந்திருந்தால், ஏன் அவர்கள் எதுவும் செய்யவில்லை? தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு உளவுத் தகவல் கிடைத்துள்ளது; அதன்பிறகே அவரது காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதை நான் செய்தித்தாளிலும் படித்தேன்’ என்றார்.

மேலும், `அவர்கள் அதை மேம்படுத்துவதாகச் சொன்னார்கள். அது குறித்து உங்களுக்குத் தெரிந்த பிறகும் ஏன் முறையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி’ என்றார்.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கடந்த ஏப்.24-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கையில் குறைபாடு இருந்ததை இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டதாக அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் இந்தியா டுடே ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு, சுற்றுலாப் பயணிகளை குறிப்பாக, ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் ஸபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக ஓர் அதிகாரி கூறியதாக, பிடிஐ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in