

சாதனையாளர்கள் மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கும் கெளவரங்களில் ஒன்று - பத்ம விருது. கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், அறிவியல், சமூக சேவை, விளையாட்டு, தொழில் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அளிக்கப்பட்டு கெளவரம் செலுத்தப்படுகிறது.
பத்ம விருதுகளின் வரலாறு
1954-ல் இருந்து மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வருடம் பாரத ரத்னா, பத்ம விபூஷண் ஆகிய இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அடுத்த வருடமான 1955-ல் இருந்து பத்ம விருதுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் மார்ச், ஏப்ரல் சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, விருதாளர்களுக்கு விருது வழங்கப்படும்.
2026-க்கான பத்ம விருதுகள் அறிவிப்பு
இப்போது 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5 பத்ம விபூஷண் விருதுகள், 13 பத்ம பூஷண் விருதுகள் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெறும் சாதனையாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 19 பேர் பெண்கள், 16 பேர் உயிரிழந்தவர்கள், 6 பேர் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள். மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழர்களைக் கணக்கெடுத்தால் மொத்தமாக 17 தமிழர்களுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக வானொலி சேவையில் முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமமூர்த்தி ஸ்ரீதருக்கு தில்லி சார்பாகவும் பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகர் மாதவனுக்கு மஹாராஷ்டிரா சார்பாகவும் சிலம்பாட்டக் கலைஞரும் பயிற்சியாளருமான பழனிவேலுக்கு புதுச்சேரி சார்பாகவும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டென்னிஸில் பல சாதனைகள் புரிந்து அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண் விருது
இந்த வருடம் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ள 13 பேரில் மருத்துவர் கே.ஆர். பழனிசாமி மற்றும் எஸ்.கே.எம். மயிலானந்தன் ஆகிய இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மருத்துவர் கே.ஆர். பழனிசாமி
சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் கே.ஆர். பழனிசாமி. இரைப்பை குடல் மருத்துவரான இவர், கடந்த 50 ஆண்டுகளாக இத்துறையில் பல சாதனைகளைச் செய்துள்ளார். 2007-ல் இவருடைய சேவையைப் பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1972-ல் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவப் பட்டமும், 1977-ல் முதுகலைப் பட்டமும் பெற்ற கே.ஆர். பழனிசாமி, இரைப்பைக் குடலியலியலில் முனைவர் பட்டம் பெற்று, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதல்முதலாக இரைப்பை குடல் மருத்துவத் துறையை நிறுவினார். 2014-ல் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடமிருந்து அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார்.
எஸ்.கே.எம். மயிலானந்தன்
எஸ்.கே.எம். குழுமத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான மயிலானந்தன், 1945-ல் ஈரோட்டில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கோழிப் பண்ணை உரிமையாளராக தனது வாழ்வைத் தொடங்கிய மயிலானந்தன், 1983-ல் கோழிப்பண்ணை விவசாயிகள் நலச்சங்கத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு அரசின் மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளைச் சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். தமிழ்நாட்டில் 2 தலித் கிராமங்களைத் தத்தெடுத்து அந்தக் கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கி வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 2 கோடி நன்கொடை அளித்தவர் மயிலானந்தன். 2013-ல் இவருடைய சேவையைப் பாராட்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பத்ம ஸ்ரீ விருது
நாடு முழுவதும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரஞ்சனி - காயத்ரி
கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி காயத்ரி மும்பையில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர்கள். இசைத்துறை வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் வயலின் இசைக்கலைஞர்களாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். இசை மேதைகளாக அறியப்படும் டி.கே. பட்டம்மாள், பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு பக்க வாத்தியமாக வயலின் இசைத்துள்ளனர். 1997 முதல் குரலிசைக் கலைஞர்களாக நிகழ்ச்சிகள் நடத்தத் தொடங்கிய ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள் - இன்று பிரபல கர்நாடக சங்கீதப் பாடகிகளாக அறியப்படுகிறார்கள்.
ஹெச்.வி. ஹண்டே
தமிழ்நாட்டு மருத்துவரும் அரசியல்வாதியுமான 98 வயது ஹெச்.வி. ஹண்டே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே சென்னையில் மருத்துவராகச் சேவையாற்றி வருகிறார். மறுபுறம் அரசியலில் ஈடுபட்ட இவர், 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அதிமுகவில் இணைந்து, அக்கட்சியின் முதல் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1980-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு 699 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இருமுறை சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் 1999-ல் பாஜகவில் இணைந்த அவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார். மருத்துவம், அரசியல் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.
வேளாண் விஞ்ஞானி கே. ராமசாமி
இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த வேளாண் விஞ்ஞானி என்று பெயரெடுத்தவர் கே. ராமசாமி. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கத்தின் முன்னாள் துணைவேந்தர் கே. ராமசாமி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் நுண்ணூயிரியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மரபணு குளோனிங் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். வேளாண் உயிரித் தொழில்நுட்பம், உரப்பாசனம் ஆகியவற்றின் தேசிய கொள்கைத் திட்டமிடலில் பங்களித்துள்ள இவர், 30-க்கும் மேற்பட்ட ஆய்வுத் திட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
கே. விஜயகுமார்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமாரை அனைத்துத் தமிழர்களும் அறிவார்கள். திருச்சி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை உயர் அதிகாரியாகப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் விஜயகுமார். 1998 முதல் 2000 வரை எல்லை பாதுகாப்புப் படையின் தலைவராகப் பணியாற்றினார். அதன்பின் சென்னையின் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். 2004-ல் சத்தியமங்கலம் காடுகளில் பதுங்கியிருந்த வீரப்பனைச் சுட்டுக் கொன்றார். அதைத் தொடர்ந்து பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அவர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்
பல ஆண்டு காலமாகத் தனது வாழ்நாளை திருமுறை ஓதுவதில் கழித்து வரும் திருத்தணி சுவாமிநாதனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தி இலக்கியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் ஓதுவார்களுக்குத் தற்போது இந்த விருதின் மூலம் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனது 17 வயதில் குன்றக்குடி தேவக்கோட்டை ஆதீனத்தில் ஓதுவாராக பணியைத் தொடங்கினார் சுவாமிநாதன். பின்னர் திருத்தணி முருகன் கோயிலில் அறநிலையத்துறை மூலம் பணியமர்த்தப்பட்டார். அதன் காரணமாக திருத்தணி சுவாமிநாதன் என்று அறியப்படுகிறார். மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்ரிக்கா, இலங்கை, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குப் பயணித்து தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளார். இவருக்குக் கலைமாமணி, திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர் உள்ளிட்ட பல விருதுகளை வழங்கி அரசு கௌரவித்துள்ளது.
கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன்
கால்நடை மருத்துவத் துறையில் முன்னோடியாக அறியப்படுபவர் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவரான இவர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மரபு வழி கால்நடை மருத்துவம் குறித்து பல ஆராய்சிகளை மேற்கொண்டுள்ளார். மாடுகளுக்கு ஏற்படும் கால் புண், கோமாரி உள்ளிட்ட நோய்களுக்கு இயற்கை வழி மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்துள்ளார்.
ஓவியர் கிருஷ்ணன்
நீலகிரி மாவட்டத்தில் ஆறு வகை பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் குரும்பர் இன மக்கள் ஓவியம் வரைவதில் மிகவும் திறமைசாலிகள். குரும்பர் இன ஓவியக் கலையை முன்னெடுத்ததில் மிகவும் முக்கியமானவர் ஓவியர் கிருஷ்ணன். 3,000 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த குரும்பர் ஓவியக் கலையை மீட்டெடுத்த கிருஷ்ணன், இயற்கை வண்ணங்கள், ஆலம் வேர் தூரிகைகளின் உதவியுடன் ஆயிரக்கணக்கான ஓவியங்களை உருவாக்கினார். மத்திய அரசின் பல விருதுகளை வென்ற இவர், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர்
சேலம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களுக்கான பாரம்பரிய சிலைகளை அமைப்பதில் ஈடுபட்டு வருகிறார். காளியப்ப கவுண்டர் இதுவரை 4,000 விக்கிரகங்களைச் செய்துள்ளார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இன்று மத்திய, மாநில அரசின் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் உருவாக்கிய சிலைகள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. “கடந்த 15 வருடங்களாக இந்த விருதை எதிர்பார்த்து வருகிறேன். இந்த விருது சிற்பக்கலைக்கான அங்கீகாரமாகவும் இறைவன் அளித்த பரிசாகவும் எண்ணிக்கொள்கிறேன். நான் உருவாக்கிய விக்கிரகங்கள் என் வம்சம் அழிந்தாலும் அவை அழியாது. இந்தப் புராதனக் கலையை கற்றுக்கொள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும்” என்று காளியப்ப கவுண்டர் பேட்டியளித்துள்ளார்.
எழுத்தாளர் சிவசங்கரி
எழுத்தாளர் சிவசங்கரியை அறியாத தமிழ் வாசகர்களே இருக்க முடியாது. 50 ஆண்டுகாலமாகத் தமிழ்ப் படைப்புலகில் இயங்கி வருகிறார். சமீபத்தில், இந்தியாவில் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான சரஸ்வதி சம்மான் விருதை வென்றார். சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி, தனது முதல் சிறுகதையை கல்கி இதழில் எழுதினார். இவர் எழுதிய ஒரு சிங்கம் முயலாகிறது, 47 நாட்கள் உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்துள்ளன.
இசைக்கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம்
மிருதங்க வித்வான் திருவாரூர் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியின் மாணவராக மிருதங்கம் பயின்றவர் திருவாரூர் பக்தவத்சலம். பின்னர் இசை மேதையாக வளர்ந்து, 1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடக்க நாள் கலை நிகழ்ச்சிகளில் மிருதங்கம் வாசித்துப் பெருமை பெற்றார். காஞ்சி மடத்தின் பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதியால் மிருதங்க வாத்திய மணி என்று பட்டம் பெற்றார். தில்லி நாடக அகாடமி, கலைமாமணி விருதுகளையும் பெற்றுள்ளார். சென்னை, கோவை, கனடா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் லய மதுரா இசைப்பள்ளி மூலம் மிருதங்கம் உள்ளிட்ட மாணவர்களுக்கு தாள இசைக்கருவிகளைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.
ஐஐடி இயக்குநர் காமகோடி
தமிழ்நாட்டில் தினசரி செய்திகளைக் கவனித்து வரும் அனைவருமே அறிந்த முகம் தான் மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமகோடி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் இளங்கலை பெற்று, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர் காமகோடி. அதே ஐஐடியில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அந்தத் துறையில் மேலும் முன்னேற்றம் அடைந்து கடந்த 2022 முதல் தற்போது வரை சென்னை ஐஐடியின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். கணினிக் கட்டுமானம், தகவல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். சர்வதேச ஆராய்ச்சி மையங்களில் 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்த ஆண்டு பத்ம விருது பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம். வரும் ஆண்டுகளில் தமிழர்களின் சாதனைகளுக்கு மேலும் அங்கீகாரம் கிடைத்து அவர்களுடைய திறமைகள் உலம் அறிவதற்கான சந்தர்ப்பங்கள் மேலும் உருவாகட்டும்.
Ministry of Home Affairs has announced Padma Awards 2026