கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் தலையிட்டு உரிய நீதியை பெற்றுத் தருமாறு பிரதமர் மோடிக்கு, பத்ம விருதுகள் பெற்ற 70 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த மௌமிதா என்பவர் கடந்த ஆகஸ்ட் 8-ல் அடையாளம் தெரியாத நபர்களால் மருத்துவக் கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பத்ம விருது பெற்றவர்கள் எழுதிய கடிதத்தில், `மிகுந்த கவலையுடன், ஆழ்ந்த வேதனையுடன் சமீபத்தில் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவங்கள் குறித்து நாங்கள் எழுதுகிறோம். இந்த நாட்டின் தலைவரான நீங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இத்தகைய மிருகத்தனமான நடவடிக்கைகள் மருத்துவப் பணியாளர்களின் சேவையைக் குலைக்கும் நோக்கில் இருக்கின்றன. இந்த சம்பவம் பெண்கள், சிறுமிகள், மருத்துவப் பணியாளர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தை எழுதியவர்களில், தில்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் பல்ராம் பார்கவா, கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.கே.சரிண் ஆகியோர் அடக்கம்.
கடந்த ஆகஸ்ட் 17-ல் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியது இந்திய மருத்துவ சங்கம்.