
ஜிஎஸ்டி மாற்றத்துக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமா என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதம் 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அடுக்காக 40% என ஓர் அடுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான பொருள்கள் 18 சதவீதம் முதல் 5 சதவீதத்துக்குள் வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அன்றாடப் பொருள்களின் விலை குறையவுள்ளன.
ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சீர்திருத்தத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ப. சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், இந்த மாற்றம் 8 ஆண்டுகள் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
"பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது. ஆனால், 8 ஆண்டுகள் கழித்து மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று வரை அமலில் இருந்த ஜிஎஸ்டி மற்றும் அதன் விகிதங்கள் தொடக்கத்தில் அறிமுகம் செய்திருக்கக் கூடாது. ஜிஎஸ்டியிலுள்ள இந்த முறைக்கு எதிராக 8 ஆண்டுகளாகக் கருத்து தெரிவித்து வந்தோம். எங்களுடைய கோரிக்கைகள் அவர்களுடைய காதுகளைச் சென்றடையவில்லை.
இந்த மாற்றங்களைச் செய்ய அரசைத் தூண்டியது எது?
மந்தமான வளர்ச்சி
உயரும் வீட்டுக் கடன்
சரியும் குடும்ப சேமிப்பு
பிஹார் தேர்தல்
டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு
அல்லது இவை அனைத்தும்"
என்று ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.
P Chidambaram | GST | GST Council | GST Rationalisation | Nirmala Sitharaman | Bihar Election | Bihar Assembly Election