
மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து கவலை தெரிவித்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.
விரும்பத்தகாக ஒரு சிலர், நீதித்துறையின் செயல்பாடுகளை மாற்றியமைக்கவும், நீதிமன்றத் தீர்ப்புகளின் மீது செல்வாக்கு செலுத்தவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நோக்கத்துடன் நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்வதாகவும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்புகளைத் திசைத்திருப்பும் முயற்சிகள் மற்றும் நீதித்துறையை இழிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவர்களின் ஆபத்தான தந்திரங்களில் ஒன்று நீதிமன்றங்களைப் பொற்காலத்துடன் ஒப்பிட்டு நீதித்துறையின் செயல்பாட்டைத் தவறாக சித்தரிக்கும் வகையில் கதைகள் புனைவது. இவை நிதித்துறையின் முடிவுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதுடன் நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சீர்குலைப்பதாகும் என்றும் வழக்குரைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதித்துறை அமர்வுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது, நீதிபதிகளின் நேர்மையைச் சந்தேகிக்கும் வகையில் அவதூறுகளைப் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செயல்கள் நீதித்துறையை அவமதிப்பது மட்டுமல்ல, நீதித்துறையின் சட்ட விதிமுறைகளுக்கே கேடு விளைவிப்பதாகும் என்று வழக்குரைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவை வெறும் விமர்சனங்கள் அல்ல, அவை நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கும் முயற்சியாகும். சட்டப்படி செயல்படுவதைத் தடுக்கும் நேரடி தாக்குதலாகும் என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சில சக்திகள், தங்கள் வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதில்கூட செல்வாக்கு செலுத்த முயல்கின்றன. முடிவுகள் தொடர்பாக நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஊடகங்கள் மூலம் பொய்களைப் பரப்பி வருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, தேர்தலுக்குத் தயாராகும் நிலையில் அவர்கள் இதுபோன்ற தந்திரங்களைக் கையாளக்கூடும். 2018-19 ஆண்டிலும் இவர்கள் தலைதூக்கினார்கள் என்பதை நினைவுபடுத்துகிறோம்.
நீதித்துறையை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அமைதியாக இருப்பது தீயசக்திகளுக்குச் சாதகமாகிவிடும். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதால் மெளனம் காக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்று உச்ச நீதிமன்றத்தை வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.