
தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகள் சிலவற்றுக்கு கடந்த ஆக. 18 அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று (ஆக. 20) காலை 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
`டெரரைசர்ஸ் 111’ என்ற பெயரில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழு, டி.ஏ.வி. பப்ளிக் ஸ்கூல், ஃபையித் அகாடமி, டூன் பப்ளிக் ஸ்கூல், சர்வோதய வித்யாலயா உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கும்படி கோரியுள்ளது.
குறிப்பாக, சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தகவல்தொழில்நுட்ப கட்டமைப்பில் நுழைந்து மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த அனைத்து தரவுகளையும் எடுத்துக்கொண்டதாகவும், 48 மணி நேரத்திற்குள் 2,000 அமெரிக்க டாலர்களை எதிரியம் (Ethereum) முகவரி வழியாக அனுப்பவில்லை என்றால் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வோம் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே கும்பல் கடந்த ஆகஸ்ட் 18 அன்று, தலா 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கிரிப்டோ கரன்சி வாயிலாக வழங்கும்படி மின்னஞ்சல் வாயிலாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இன்று (ஆக. 20) காலை 7.40 மணி தொடங்கி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சம்மந்தப்பட்ட பள்ளிகளில் இருந்தவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், வெடிகுண்டு நிபுணர்கள் வருகை தந்து பள்ளி வளாகங்களை முழுமையாக சோதனையிட்டனர்.