
தில்லியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
30 ஆயிரம் அமெரிக்க டாலர் கோரி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மின்னஞ்சல் மூலம் ஜிடி கோயங்கா பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நிறைய வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலைத் தொடர்ந்து, தில்லி காவல் துறை, வெடிகுண்டு நிபுணர் குழு, தீயணைப்புத் துறை அதிகாரிகள் பள்ளி வளாகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மிரட்டல் காரணமாக மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
தில்லி முதல்வர் ஆதிஷி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், "மிரட்டிப் பணம் பறித்தல், கொலை, துப்பாக்கிச் சூடு, தற்போது பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு தில்லி மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது" என்றார்.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிடுகையில், "தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. அமித் ஷா தில்லி மக்களுக்குப் பதிலளித்தாக வேண்டும்" என்றார்.
முன்னதாக, வெடிகுண்டு மிரட்டல் மற்றும் இதுதொடர்புடைய அவசரநிலைகளுக்குத் தீர்வு காண தில்லி அரசு மற்றும் தில்லி காவல் துறை இணைந்து செயல் திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 19 அன்று அறிவுறுத்தியது.