காங்கிரஸில் இணைந்தவுடன் பெண்களுடன் துணை நிற்கும் ஒரு கட்சியில் இணைந்ததை எண்ணிப் பெருமை கொள்வதாக வினேஷ் போகாட் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் அக்டோபர் 5-ல் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மல்யுத்த வீரர் வினேஷ் போகாட் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதை வலுப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாட் கடந்த 4 அன்று சந்தித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, வினேஷ் போகாட் இன்று காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. தாங்கள் பணியாற்றி வந்த ரயில்வே பணிகளை இருவரும் ராஜினாமா செய்தார்கள். தில்லியிலுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேரில் சந்தித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர் பவன் கெரா, ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பான் மற்றும் ஹரியானாவுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தீபக் பபாரியா, பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். இருவரும் காங்கிரஸில் இணைவது குறித்த அறிவிப்பை கே.சி. வேணுகோபால் வெளியிட்டார்.
காங்கிரஸில் இணைந்தது பற்றி பஜ்ரங் புனியா கூறியதாவது:
"எங்களுடன் துணை நிற்க வேண்டும் என பாஜகவின் அனைத்துப் பெண் எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால், அவர்கள் யாரும் இதுவரை வரவில்லை. நாங்கள் பெண்களுக்காக குரல் எழுப்புகிறோம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பக்கம்தான் பாஜக நிற்கும் என்பது எங்களுக்குத் தற்போது தெரிந்துவிட்டது. மற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் துணை நிற்கின்றன. காங்கிரஸ் கட்சியையும் நாட்டையும் பலப்படுத்த நாங்கள் கடுமையாக உழைப்போம். வினேஷ் இறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்தவுடன் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியடைந்தது. அடுத்த நாள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தார்கள். ஒரு ஐடி பிரிவு மட்டும் அன்று கொண்டாட்டத்தில் இருந்தது" என்றார் அவர்.
வினேஷ் போகாட் கூறியதாவது:
"நாங்கள் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருந்தபோது, பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் துணை நின்றன. பெண்களுக்காகத் துணை நிற்கும் ஒரு கட்சியில் இணைந்துள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
எங்களுடையப் போராட்டம் (பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான) இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்தப் போராட்டத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நாட்டுக்கு சேவையாற்ற எங்களுக்குப் புதிய தளம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தை எப்படி மனதார விளையாடினோமோ, மக்களுக்காகப் பணியாற்றுவதையும் சிறப்பாக செய்வோம். உங்களுடன் (பெண்கள்) நான் துணை நிற்பேன். காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். இதை நான் உணர்ந்துள்ளதால், உங்களுக்கும் இந்த ஆதரவு கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்" என்றார் வினேஷ் போகாட்.