
தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்த ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கும் விதமாகப் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், "அண்மையில் வெளியான தீர்ப்பு குடியரசுத் தலைவருக்கு உத்தரவைப் பிறப்பிக்கிறது. நாம் எதை நோக்கி பயணிக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடக்கோரிய சூழல் இருக்கக் கூடாது. எதன் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பிக்க முடியும்? அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142, உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கும் சிறப்பு அதிகாரம், ஜனநாயகச் சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதத் தாக்குதலாக மாறியுள்ளது" என்றார் ஜகதீப் தன்கர்.
ஜகதீப் தன்கரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்கள்.
மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், ஜகதீப் தன்கரின் கருத்து குறித்துப் பேசுகையில், "இதுவரை எந்த ஒரு மாநிலங்களவைத் தலைவரும் (குடியரசு துணைத் தலைவர்) இதுபோல அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தது இல்லை. பாஜகவைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு நடந்துகொண்டது இல்லை. அரசு நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது உண்மையிலேயே கவலைக்குரியது. அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கூறுவது சரியல்ல" என்றார் கபில் சிபல்.
ஜகதீப் தன்கர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
"குடியரசு துணைத் தலைவர் என்பது அரசியலமைப்புப் பதவி. அரசியலமைப்பு நிறுவனங்களை இதுபோல அவர் தாக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தை அவர் சாடிய விதத்தைப் பார்க்கும்போது, குடியரசு துணைத் தலைவர் பதவியை வகிப்பதற்கானத் தகுதியை அவர் இழந்துவிட்டார். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார் கல்யாண் பானர்ஜி.
முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அரசை நடத்த வேண்டும். நியமனம் செய்யப்பட்டவர்களால் அல்ல. சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் இல்லை, அவர் எவ்வளவு உயர்வானவராக இருந்தாலும் சரி. இதைத் தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
ஜகதீப் தன்கர் கருத்துக்கு விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், இவருக்கு ஆதரவாக பாஜக தலைவர் பிரகாஷ் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
"ஜகதீப் தன்கரின் கருத்தை விமர்சிப்பவர்கள் எவருக்கும் இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் மீது நம்பிக்கையில்லை என்று அர்த்தம். ஜகதீப் தன்கரும் இந்திய ஜனநாயகத்தின் ஓர் அங்கம் தான். எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி தன்கரை விமர்சிக்கிறார்கள் என்பது புரியவே இல்லை" என்றா் பிரகாஷ் ரெட்டி.