தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு! | Impeachment | CEC

இந்திய அரசியலமைப்புப் பிரிவு 324(5)-ன் கீழ், உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரையும் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்.
தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஷ் குமார் - கோப்புப்படம்
தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஷ் குமார் - கோப்புப்படம்ANI
1 min read

இந்திய தேர்தல் ஆணையம் மிகப்பெரிய அளவிலான வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய சில நாள்களில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி பதவி நீக்கத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையத்துடனான எதிர்க்கட்சிகளின் மோதல் போக்கு அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆளும் மத்திய பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக வாக்காளர் தரவுகளை தேர்தல் ஆணையம் கையாள்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் காந்தி குற்றம்சாட்டினார். `திருடப்பட்ட வாக்குகள்’ மஹாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் ஹரியாணாவில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்ததாக கடந்த ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

குறிப்பாக, பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் `சதி’ செய்ததாக ராகுல் காந்தி வெளிப்படையாக குற்றம்சாட்டியது பேசுபெருளானது.

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் பதிலடி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நேற்று (ஆக. 17) நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அவை ஆதாரமற்றவை என்றும் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் கூறினார்.

தனது குற்றச்சாட்டுகளை கையொப்பமிடப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் மூலமாக ராகுல் காந்தி சமர்ப்பிக்கவேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவர் கோரினார்.

ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

தலைமைத் தேர்தல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ராகுல் காந்திக்கு ஆதவளித்தன.

தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்துக்கள் ஒரு தன்னாட்சி அதிகாரம்கொண்ட அரசியலமைப்பு அதிகாரியின் கருத்துக்கள்போல இல்லாமல், பாஜக நிர்வாகியின் கருத்துக்கள்போல இருப்பதாக காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறினார்.

அதேபோல ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஜா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. மஹுவா மாஜி ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

பதவி நீக்கத் தீர்மானம்

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து ஞானேஷ் குமாரை நீக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324(5)-ன் கீழ், உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரையும் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in