
நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் வக்ஃபு சட்டதிருத்த மசோதா குறித்து இன்று (அக்.28) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், தில்லி வஃக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த மக்களவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு சட்டதிருத்த மசோதா தொடர்பாக ஆய்வு செய்து நாடாளுமன்றத்திடம் அறிக்கை வழங்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற கூட்டுக்குழு கூட்டத்தில், சட்ட திருத்த மசோதா தொடர்பாக தில்லி யூனியன் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் வஃக்பு வாரியங்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டிருந்தது.
அப்போது தில்லி முதல்வரின் அனுமதியைப் பெறாமல் தில்லி வஃக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அஷ்விணி குமார், வஃக்பு வாரியம் அளித்த அறிக்கையை முற்றிலுமாக மாற்றி புதிய அறிக்கை அளித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அஷ்விணி குமாரின் இந்தப் போக்கைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்களான சஞ்சய் சிங், எம்.எம். அப்துல்லா ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாளை (அக்.29) நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில், மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சட்ட திருத்த மசோதா தொடர்பான வாக்குமூலத்தை வழங்குகின்றனர்.
கடைசியாக கடந்த அக்.22-ல் நடைபெற்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆகியோருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் முடிவில் கல்யாண் பானர்ஜியின் கையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (அக்.28) நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்க கல்யாண் பானர்ஜிக்குத் தடை விதித்தார் குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால்.