முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம்?: பிரதமர் மோடியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

"கடின உழைப்பால் நீங்கள் ஈட்டிய பணத்தை, ஊடுருவி வந்தவர்களிடம் கொடுக்கலாமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?"
முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம்?: பிரதமர் மோடியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
ANI

ராஜஸ்தான் தேர்தல் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி வெறுப்புப் பிரசாரத்தைப் பரப்பியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மற்றும் பான்ஸ்வாரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த இரு தொகுதிகளிலும் ஏப்ரல் 26-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

"காங்கிரஸ் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருப்பது மிகத் தீவிரமான விஷயம். காங்கிரஸ் ஆட்சியமைத்தால், அனைவருடைய சொத்து விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்படும். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்குச் சொந்தமான தங்கத்தைக் கணக்கெடுத்து, அவை மறுவிநியோகம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்கள். உங்களுடைய தாலியைக்கூட அவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள்.

நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்களுடைய சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுக்கு உரிமை உள்ளதா? தங்கம் என்பது வெறும் காட்சிப் பொருளல்ல. பெண்களின் சுயமரியாதையுடன் தொடர்புடையது. அவர்களுடைய தாலி கனவுகளுடன் தொடர்புடையது. இதைப் பறிக்க நினைக்கிறீர்களா?

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது நாட்டின் வளத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறியது. அதாவது, அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்து, அதை அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவர்கள் மத்தியிலும், ஊடுருவி வந்தவர்கள் மத்தியிலும் மறுவிநியோகம் செய்வார்கள்.

கடின உழைப்பால் நீங்கள் ஈட்டிய பணத்தை, ஊடுருவி வந்தவர்களிடம் கொடுக்கலாமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்றார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரத்தைப் பரப்புவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது தேர்தல் நடத்தை விதி மீறலில் வராதா என்று பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தையும் விமர்சிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in