
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று (ஜூன் 3) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த கடிதத்தில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸின் டெரிக் ஒ பிரைன், சமாஜ்வாதியின் ராம்கோபால் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, சிவசேனாவின் சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த கடிதத்தில் திமுக சார்பில் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் காரணமாக அக்கட்சி சார்பில் யாரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
ஆம் ஆத்மி கட்சி இந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தாலும், அக்கட்சி சார்பில் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு தனியாக கடிதம் எழுதப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு நாடு திரும்பிய பிறகு, இந்த சிறப்பு கூட்டத்தொடரை நடத்தவேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.