
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி முதல்வர் ஓமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளன.
முன்பு மாநிலமாக இருந்தபோது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 2019-ல் இந்திய நாடாளுமன்றத்தால் இந்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் என, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு முதல்முறையாக கடந்த செப். மற்றும் அக். மாதங்களில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் பரப்புரையின்போது முன்பு 370 சட்டப்பிரிவு மூலம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மீண்டும் மீட்டெடுப்போம் எனப் பேசியிருந்தார் ஓமர் அப்துல்லா.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்.8-ல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வென்று அக்.16-ல் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஓமர் அப்துல்லா. அவருடன் 5 எம்.எல்.ஏ.க்கள் மாநில அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று (அக்.18) முதல்வர் ஓமர் அப்துல்லா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தனிப்பட்ட வகையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஓமர் அப்துல்லா வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் வஹீத் உர் ரஹ்மான், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் 370 சிறப்பு அந்தஸ்தை வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தாத முதல்வர் ஓமர் அப்துல்லாவுக்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர்.