
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர்தான் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்நாட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் பகுதியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏவுகணைகளின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசியதாவது:-
“பிரம்மோஸ் ஏவுகணைகள் நம் நாட்டு ஆயுதப்படையின் பலத்தை மட்டும் குறிக்கவில்லை. உள்நாட்டு பாதுகாப்போ வெளிநாட்டு அச்சுறுத்தலோ, எந்த சவாலையும் எதிர்கொள்ள உத்தர பிரதேசம் தயாராகி விட்டது என்ற செய்தியையும் அறிவிக்கிறது.
உத்தர பிரதேசம் அதன் குற்றவாளி தோற்றத்தில் இருந்து வெளியேறிவிட்டது. இதற்காக இம்மாநில முதல்வர் பாராட்டுக்குரியவர். பிரம்மோஸ் ஏவுகணை நமது ஆயுதப்படையின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்திலிருந்து ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் வெளிவரவுள்ளன. அவை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு அனுப்பப்படும். இதற்கான தயாரிப்பு மையம் 200 ஏக்கர் பரப்பளவில், ரூ. 380 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.. இது நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பு பலத்தைக் கண்கூடாகக் காண உதவியது. ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரெய்லர்தான். இதுவே பாகிஸ்தானுக்குப் பிறப்பு கொடுத்த இந்தியாவால், ‘வேறு’ செயல்களையும் செய்ய முடியும் என்று புரிய வைத்திருக்கும். அது என்னவென்று நான் சொல்ல விரும்பவில்லை” என்றார்.