
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்களில், சஞ்சய் ஜா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான இரண்டு குழுக்கள் இன்று (மே 21) பயணத்தைத் தொடங்கவுள்ளன.
சஞ்சய் ஜா தலைமையிலான குழு காலை 11.40 மணிக்கு ஜப்பானுக்கு புறப்படவுள்ளது. அதேநேரம் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு இரவு 9 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்படவுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை தெரிவிக்க, ஒட்டுமொத்தமாக ஏழு குழுக்கள் வெளிநாட்டுத் தலைநகரங்களுக்குச் செல்கின்றன.
இந்த இரு குழுக்களில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள், எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களிடம் பயணத்தின் நோக்கம் குறித்த மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார்.
`அமைதிக்காக இந்தியா உறுதிபூண்டிருந்தாலும், அதன் மண்ணில் நடைபெறும் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களையும் அது பொறுத்துக்கொள்ளாது; நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்’ என்று அவர் பேசியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானை தொடர்ந்து சிங்கப்பூர், தென் கொரியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குக் குழுவை வழிநடத்திச் செல்லும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சஞ்சய் ஜா, இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், `பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் அளிக்கும் உறுதிமொழிகளை இந்தியா நம்பும்போதெல்லாம், `தனது குற்றத்தை விசாரிக்கச் சொல்லும் திருடனைப் போல பாகிஸ்தான் நடந்துகொண்டுள்ளது’ என்றார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லும் குழுவிற்கு தலைமை தாங்கும் சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, `பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை வெளிநாடுகளில் முன்வைத்து, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் அதன் பங்கை வெளிப்படுத்துவோம்’ என்றார்.