
ஈரான்-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியாக இஸ்ரேல் வான்வெளி மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகங்கள், ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் நேற்று (ஜூன் 22) முதற்கட்டமாக 160 இந்தியர்களை வெளியேற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள், ஈரானால் செலுத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பான அறைகளில் அடிக்கடி தஞ்சம் புகுந்து வந்த நிலையில், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமக்கள் அடங்கிய முதல் குழுவின் வெளியேற்றத்தை இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தூதரக அதிகாரி ஒருவர்,
`இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்ட 160 இந்தியர்கள் அடங்கிய முதல் குழு இஸ்ரேல்-ஜோர்டன் எல்லையை வெற்றிகரமாகக் கடந்து, ஜோர்டனில் பாதுகாப்பாக உள்ளது. அவர்கள் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நாளை அதிகாலையில் ஒரு சிறப்பு விமானம் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும், இந்தியர்கள் பாதுகாப்பாக எல்லை தாண்டிச் செல்வதை உறுதி செய்வதில் இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் அரசாங்கங்கள் போதிய ஆதரவு வழங்கியுள்ளதாக தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், செவிலியர்கள், தொழில் வல்லுநர்கள் என ஏறக்குறைய 40 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இஸ்ரேலில் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக 24 மணிநேரமும் இயங்கும் தொலைபேசி உதவி எண்ணை இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
முன்னதாக உக்ரைன், ஆப்கானிஸ்தான், சூடான் மற்றும் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை வெற்றிகரமாக அழைத்து வந்த ஆபரேஷன் கங்கா, ஆபரேஷன் தேவி சக்தி, ஆபரேஷன் காவேரி மற்றும் ஆபரேஷன் அஜய் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் வரிசையில் தற்போது ஆபரேஷன் சிந்துவும் இணைந்துள்ளது.