
உலகளவில் பார்க்க வேண்டிய 52 இடங்கள் பட்டியலில், ஓரே இந்திய மாநிலமாக அஸ்ஸாம் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் உலகளவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. அந்த வகையில் நடப்பு 2025-ம் ஆண்டில் உலகளவில் பார்க்கவேண்டிய 52 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் தொடர்புடைய இடங்களில், ஈக்வடார் நாட்டுக்குச் சொந்தமான காலபோகஸ் தீவுகள், நியூயார்க் நகர அருங்காட்சியங்கள் ஆகியவை இந்தப் பட்டியலின் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. 4-வது இடத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மாநிலம் இடம்பெற்றுள்ளது.
மியான்மர் மற்றும் வங்கதேசம் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பாங்கான மாநிலமான அஸ்ஸாம் வடகிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குவதாகவும், சர்வதேச அங்கீகாரம் தொடர்ந்து அஸ்ஸாமிற்குக் கிடைத்து வருவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளது நியூயார்க் டைம்ஸ்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அஹோம் அரச வம்சத்தினரின் 700 வருடப் பழமையான சமாதிகளான மொய்தாம் கடந்தாண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
ஆண்டுக்கு ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதையும், அங்கு சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதையும் குறிப்பிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்களும், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும் அஸ்ஸாமின் புகழ்பெற்ற அடையாளங்களாக உள்ளன.