
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும், `ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா’, விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இன்று (ஆக. 20) நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை முற்றிலுமாக தடை செய்ய வழிவகுக்கும், `ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதாவிற்கு’ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (ஆக. 19) ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதா பணம் செலுத்தி விளையாடும் அனைத்து வகையான ஆன்லைன் பந்தயங்கள் மற்றும் சூதாட்டங்களை தடை செய்கிறது. இதில் கற்பனை வடிவிலான விளையாட்டுகள், போக்கர் மற்றும் ரம்மி போன்ற சீட்டாட்டங்கள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகள் ஆகியவை அடங்கும்.
மேலும், அத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களையும் இந்த மசோதா தடை செய்கிறது. அத்துடன், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு பணம் செலுத்த வழிவகை செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்புடைய பரிவர்த்தனைகளையும் இந்த மசோதா தடை செய்கிறது.
இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கி வழங்குதல் அல்லது இவற்றில் விளையாட வழிவகை செய்தல் ஆகியவை குற்றச்செயல்களாக கருதப்பட்டு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று (ஆக. 20) மக்களவையில் தாக்கல் செய்தார்.
பதவி நீக்க மசோதா தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.