மாணவர்களுக்குப் பலன் தரும் ஒரே நாடு ஒரே சந்தா திட்டம்: ஜனவரியில் அமல்!

ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் சர்வதேச அளவில் பிரபலமான 30 வெளியீட்டாளர்களுடன் மத்திய அரசு நடத்திய தொடர் பேச்சுவார்த்தையால் இந்தத் திட்டம் சாத்தியமாகியுள்ளது.
மாணவர்களுக்குப் பலன் தரும் ஒரே நாடு ஒரே சந்தா திட்டம்: ஜனவரியில் அமல்!
1 min read

ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி இதழ்களை இலவசமாகப் படிக்கும் வகையிலான கோடிக்கணக்கான மாணவர்களுக்குப் பலன் தரும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சந்தா திட்டம் வரும் ஜனவரி 3 முதல் அமலுக்கு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் நாடுகள் பட்டியலில் இந்திய 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த நவ.25-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, `ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.

இந்தத் திட்டத்தின் கீழ் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள சுமார் 13 ஆயிரம் ஆராய்ச்சி இதழ்களை டிஜிட்டல் முறையில் உயர் கல்வி மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இலவசமாக படிக்க முடியும். 2025, 2026, 2027 என அடுத்த 3 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள சுமார் 1.8 கோடி மாணவர்களும், ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால், மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் செலவிடும் மொத்த தொகையில் சுமார் 18 சதவீதம் அளவுக்குக் குறையும் எனவும், அத்துடன் இந்தியாவில் ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை உயருவதுடன், ஆராய்ச்சிகளின் தரமும் மேம்படும் எனவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் சர்வதேச அளவில் பிரபலமான 30 வெளியீட்டாளர்களுடன் கடந்த 2 வருடங்களாக மத்திய அரசு நடத்திய தொடர் பேச்சுவார்த்தையால் இந்தத் திட்டம் சாத்தியமாகியுள்ளது. இந்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு வெளிநாட்டினர் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in