
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாக்களை இன்று (டிச.17) மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால்.
நாட்டின் மக்களவை, அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள் மற்றும் நகர்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த வரைவு அறிக்கையை கடந்த 2018-ல் வெளியிட்டது நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான 21வது இந்திய சட்ட ஆணையம்.
இதனை தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க, மத்திய சட்ட அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு, 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மார்ச் 14-ல் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் தொடர்பான ஒரு மசோதாவுக்கும், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகள் தொடர்பான மற்றொரு மசோதாவுக்கும் கடந்த டிச.12-ல் ஒப்புதல் வழங்கியது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை.
இந்த மசோதாக்கள் நேற்று (டிச.16) மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என கடந்த வாரம் வெளியான மக்களவை அலுவல்கள் பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு வெளியான புதுப்பிக்கப்பட்ட அலுவல் பட்டியலில் இருந்து இந்த மசோதாக்கள் தாக்கல் தொடர்பான விவரங்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால்.
பாஜக கூட்டணிக்கட்சிகளும், அதன் கூட்டணியில் இல்லாத அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரம் இதற்கு இண்டியா கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.