ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: தாக்கல் ஒத்திவைப்பு!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த அறிக்கையை 2018-ல் வெளியிட்டது இந்திய சட்ட ஆணையம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: தாக்கல் ஒத்திவைப்பு!
1 min read

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதாக்கள் மக்களவையில் நாளை (டிச.16) தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தாக்கல் ஒத்திவைக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் மக்களவை, அனைத்து மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த வரைவு அறிக்கையை கடந்த 2018-ல் வெளியிட்டது இந்திய சட்ட ஆணையம். இதை அடுத்து, கடந்த 2019 சுதந்திர தின உரையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்துப் பேசினார் பிரதமர் மோடி.

இதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் 2023-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது மத்திய அரசு.

பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு, கடந்த மார்ச்சில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த 18,000 பக்க அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு. இந்த அறிக்கையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதாக்களுக்கு கடந்த டிச.12-ல் ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை.

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் தொடர்பாக ஒரு மசோதாவையும், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை தொடர்பாக ஒரு மசோதாவையும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் நாளை தாக்கல் செய்வார் என அறிவிப்பு வெளியானது.

ஆனால் சில நிதி மசோதாக்கள் தொடர்பாக அலுவல்கள் நிலுவையில் இருப்பதால், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் நாளை தாக்கல் செய்யப்படாது என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் இவை வார இறுதியில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. நடப்பு வாரத்தின் வெள்ளிக்கிழமை (டிச.20) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி வேலை நாளாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in